2007 முடிந்த நேரத்தில் அரசியல் போர்மேகங்கள் சூழ்ந்து தமிழக மக்களுக்கு ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எது நடந்தாலும் அதை தாங்கிக் கொள்ள கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறோம். எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே வழங்கும் புதிய பத்திரிகையான ஏழைரைபக்க நாளேடை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
ஏழரைபக்க நாளேடு!
கும்மியடித்தாலும் சரி, கும்மாளம் போட்டாலும் சரி.. உங்கள் டவுசர் நிச்சயம் கிழிக்கப்படும்!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறுபான்மையினரின் காவலர் நரேந்திரமோடி!! - கருணாநிதி புகழாரம்!!
சிறுபான்மை மக்களை காக்கக்கூடிய காவலராக, காயிதேமில்லத்தின் மறு உருவமாக நரேந்திர மோடியை காணுகிறேன் என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி. நேற்று மாலை நரேந்திரமோடி அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரை மரியாதைநிமித்தம் சந்தித்தபின் இவ்வாறாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மேலும் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் அந்நியசக்திகளின் ஊடுருவலை முறியடித்து பாரதத்தை காக்கும் கட்சியோடு திமுக கூட்டணி வைக்குமா என்பதை திமுகவின் பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். பேட்டியின் போது அமைச்சர் ஆற்காடு வீராஸ்வாமி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேராயர் எஸ்றா சற்குணம், திமுகவின் கீழக்கரை கிளை தலைவர் ஜலாலுதீன், பாஜக பொதுச்செயலாளர் இல.கணேசன், திருநாவுக்கரசர் ஆகியோரும் உடனிருந்தனர். காஞ்சி சங்கரமடத்திலிருந்து காமாட்சியம்மன் கோயில் பிரசாதம் கருணாநிதிக்கு பிரத்யேகமாக பூஜை செய்து அனுப்பப்பட்டிருந்தது.
30வது அணி! ஜெ. அதிரடி!!
போயஸ் கார்டனில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேற்று மாலை கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்டு) பொலிட்பீரோ தலைவர் பிரகாஷ் கரத், கம்யூனிஸ்டு (வலது) தலைவர் ராஜா ஆகியோர் சந்தித்ததை அடுத்து தேசிய அளவிலான அரசியலில் சுனாமி அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இச்சந்திப்பைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு ஜெ. பேட்டியளித்தார். கம்யூனிஸ்டு தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்கும் பொருட்டாக கார்டனின் பின்வாசல் வழியாக வெளியேறி சுவர் ஏறி குதித்து தப்பினார்கள். ஜெ. அளித்த பேட்டி பின்வருமாறு :
”சென்ற ஆண்டு சந்திரபாபு நாயுடு, முலாயம் போன்ற மண்குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கி மூன்றாவது அணி அமைத்து மூளியாகிப் போனேன். இம்முறை அவ்வாறாக இல்லாமல் அதிமுகவில் இருந்து ஒருவரை பிரதமராக ஏற்றுக் கொள்ளக்கூடிய கூட்டணியை அமைக்க முடிவு செய்திருக்கிறேன். இடையில் கண்ட கபோதிகளும் ஒவ்வொரு அணி உருவாக்கி இருக்கிறபடியால் எங்களது அணி 30வது அணியாக ஆகிவிட்டது. இது 30வது அணியாக இருந்தாலும் முதல் அணி (செங்கோட்டையன், ஓபிஎஸ் விசிலடித்து கைத்தட்டுகிறார்கள்) 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து செங்கோட்டையில் அதிமுகவின் கொடியை ஏற்றுவோம். அயல்நாட்டு அண்டோமேனியா, நரமாமிச நரேந்திரமோடி, கயவன் கருணாநிதி கும்பலை நாட்டை விட்டே துரத்துவோம்” என்றார்.
“புத்ததேவ் பட்டாச்சார்யா புதியதாக வலம் வரும் லெக்சஸ் சொகுசு கார் அம்மா வாங்கிக் கொடுத்தது அல்ல” என்று அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் அப்போது பத்திரிகையாளர்களிடம் ரகசியமாக கிசுகிசுத்தார்.
மாமனிதர் கருணாநிதி! - சோ தலையங்கம்
கருணாநிதி ஒரு மாமனிதர். அவர் நாட்டுக்கு வழிகாட்டுவார் என்று சமீபத்தில் 1976லேயே நான் எழுதியிருக்கிறேன் என்று சோ தனது துக்ளக் தலையங்கத்தில் எழுதியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் எழுதியிருப்பதாவது :
இன்றைய நிலையில் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாமனிதர் கருணாநிதி விளங்குகிறார். இவர் இதுபோல நாட்டுக்கே வழிகாட்டுவார் என்று சமீபத்தில் 1976ல் மிசா சட்டம் பத்திரிகைகளின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தபோதே நான் எழுதியிருக்கிறேன். 1976 செப்டம்பர் 23 துக்ளக் இதழில் வெளிவந்த கேள்வி-பதில் :
கேள்வி : எதிர்காலத்தில் கருணாநிதி என்ன ஆவார்? - நரசிம்மன் ராகவன் அய்யங்கார், சென்னை-61
சோ பதில் : எதிர்காலத்தில் அவர் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்து கருணாநிதி ஜெயில் கைதியாகவும் ஆகலாம். இல்லையென்றால் ஏதோ ஒரு அதிசயம் நடந்து அவர் நாட்டுக்கே வழிகாட்டவும் காட்டலாம். என்ன ஆனாலும் அது அவரது குடும்பத்துக்கு நல்லது. நாட்டுக்கு நல்லதா என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
76ல் நான் எழுதியது 2008க்கும் பொருந்துகிறது அல்லவா? கருணாநிதி, சுப்பிரமணியசாமி, இல.கணேசன் போன்றவர்கள் கூட்டணி அமைத்து தமிழகத்தில் நாற்பது சீட்டுகளையும் வென்று மத்தியில் நரேந்திரமோடியை ஆட்சிக்கு வரவைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது நடந்தால் நாட்டுக்கு நல்லது.
கனவால் அமைந்த கூட்டணி! - நமது சிறப்பு நிருபர் பரபரப்புத் தகவல்!
திமுக-பாஜக கூட்டணி அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு அமைவது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த கூட்டணியை அமைத்தவர் அமரர் அண்ணா என்ற புதுத்தகவல் வெளியாகியிருக்கிறது. அத்வானியை சந்திக்க நேற்று மாலை தமிழக முதல்வர் கருணாநிதி சென்றபோது இத்தகவலை துரைமுருகன் தெரிவித்தார்.
கருணாநிதி கனவில் தோன்றிய பேரறிஞர் அண்ணா ‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் தம்பி. என் நண்பர் வாஜ்பாய் வீற்றிருக்கும் பாஜக எனும் சுவரில் ஆட்சி என்னும் சித்திரத்தை வரை' என்று சொன்னாராம். அதே இரவில் வாஜ்பாய் கனவிலும் தோன்றிய அண்ணா ‘என் தம்பியை அரவணைத்து ஆட்சியமைத்து நாட்டை மோடி மூலமாக காப்பாற்றுங்கள் தோழர்' என்றும் சொன்னாராம்.
இத்தகவலை கேள்விப்பட்டதிலிருந்து தமிழகமெங்கும் இருக்கும் திமுக உடன்பிறப்புகள் உடல்சிலிர்த்துப் போயிருக்கிறார்கள்.
தேமுதிகவால் புரட்சி ஏற்படும்! - விஜயகாந்த் சூசகத் தகவல்!
விஜயகாந்தின் பண்ணைவீட்டில் இருந்த மாட்டுக்கொட்டகையை வாய்க்கால் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் இடித்துவிட்டது. அதைக் கண்டித்து மதுரை மாட்டுத் தாவணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது :
“நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சி காங்கிரஸ் கட்சி. நல்லவர் மூப்பனார் அந்த கட்சியில் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கருணாநிதி காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியாவையும் அவமானப்படுத்துகிறார். என் தந்தை பாரம்பரிய காங்கிரஸ்காரர் என்பதால் இன்று என் வீட்டில் இருந்த மாட்டுக் கொட்டகையை ஆள்வைத்து மு.க.ஸ்டாலின் இடித்திருக்கிறார். இதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்லவேண்டிய காலம் வரும்.
என்னைப் பார்த்து முலாயம்சிங் யாதவ் பயப்படுகிறார், சந்திரபாபு நாயுடு பயப்படுகிறார். ஜார்ஜ் புஷ் பயப்படுகிறார். பிடல்காஸ்ட்ரோ பயப்படுகிறார்” இவ்வாறாக விஜயகாந்த் பேசினார்.
‘காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்தாலும் சேர்வோம்' என்று பண்ரூட்டி ராமச்சந்திரன் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தபோது பேசியது நமது நிருபரின் காதில் விழுந்தது.
பாமக நிலை பரிதாபம்!
திமுக, அதிமுக கூட்டணிகள் உறுதியாகிவிட்ட நிலையில் இரு கூட்டணிகளுமே பாமகவை கழட்டிவிடும் முடிவில் இருக்கின்றன. இருந்தாலும் கிடைக்கிற கேப்பில் கடாவெட்டும் நோக்கத்தில் கோபாலபுரம் பக்கமாக காலையில் வாக்கிங்கும், மாலையில் போயஸ் கார்டன் வாசலில் அங்கப்பிரதட்சணமும் செய்துவருகிறார் டாக்டர் ராமதாஸ். டெல்லிக்கு சென்றபோது சோனியா வீட்டு வாட்ச்மேன் தனக்கு சல்யூட் வைக்கவில்லையென்று அவசர அவசரமாக மத்திய அரசை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் சென்றமாதம் அறிக்கை விட்டிருந்ததால் காங்கிரஸ் வட்டாரமும் பாமக மீது கோபமாக இருக்கிறது. இந்நிலையில் திருமாவளவனும் திமுகவோடே ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்பதால் தனித்து நின்றால் ஒரு தொகுதியிலாவது டெபாசிட் வாங்கமுடியுமா என்று ஜி.கே.மணியுடன் விவாதித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ்.
சமூகநீதி காத்த வீராங்கனை - வீரமணி பரவசம்
பெரியார் திடலில் முந்தாநாள் நடந்த சமூக இழிவுநிலை மாற்றம், மூடநம்பிக்கை ஒழிப்பு மற்றும் புரட்சிகர விழிப்புணர்ச்சி மாநாட்டில் இறுதியுரையாற்றிய வீரமணி ஜெயலலிதா தான் சமூகநீதி காத்த வீராங்கனை. தந்தை பெரியார் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரே திராவிடத் தலைவர் அவர் தான். தந்தை பெரியார் பெயரை கெடுக்கவே தன்னை பெரியாரின் சீடர் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார் என்று காட்டமாகப் பேசினார். முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் சத்யராஜ், இயக்குனர் சீமான் ஆகியோர் ஆவேசமாகப் பேசினர்.
எங்கே போகும் இந்தப் பாதை - வைகோ ஒப்பாரி
நேற்று வேளச்சேரியில் நடந்த எழுச்சிநாள் பொதுக்கூட்டத்தில் ‘என்னை கைது செய்துபார்' என்று கருணாநிதிக்கு சவால் விட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆவேசமாக மூன்றரை மணிநேரம் பேசிய வைகோ சுயபச்சாதாப கழிவிரக்கத்தின் உச்சியில் சேது படத்தில் இடம்பெற்ற “எங்கே செல்லும் இந்தப் பாதை” பாடலை உருக்கமாகப் பாடினார். கூட்டத்தில் இருந்தவர்கள் சோகமாக கண்ணீர் சிந்த, தொண்டர்களை உற்சாகப்படுத்த அந்தப் பாடலுக்கு சம்பந்தமேயில்லாமல் குத்தாட்டம் போட்டார் நாஞ்சில் சம்பத். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வேளச்சேரி மணிமாறன் குட்டிக்கரணம் போட்டு சோகத்தை மறைக்க முயன்றார்.
திமுக பாஜகவோடு கூட்டு வைப்பதும், அதிமுக இடதுசாரிகளோடு கூட்டு வைப்பதும் உறுதியாகிய நிலையில் மம்தா பானர்ஜியோடாவது கூட்டு வைக்கலாமா என்று வைகோ செய்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் மதிமுகவினர் சோர்ந்துப் போயிருக்கிறார்கள். வைகோவுடன் கூட்டணி பேசவந்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மதிமுகவுக்கு மூன்று சீட்டு தான் கொடுக்கமுடியும் என்று கறாராகப் பேசிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிச்சையெடுத்தாவது திமுக-பாஜக கூட்டணியை வெற்றிபெற வைப்பேன்! - சு.சாமி சபதம்!
ஒவ்வொரு வாக்களரின் காலில் விழுந்து பிச்சையெடுத்தாவது திமுக-பாஜக கூட்டணியை வெற்றிபெற வைப்பேன். இதற்காக கலைஞர் எனக்கு செய்யவேண்டியது ஒன்றே ஒன்று. மத்தியசென்னையில் சந்திரலேகாவை நிற்கவைத்து வெற்றி பெறவைக்கவேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கூறினார். மேலும் மன்மோகன்சிங் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பஞ்சுமிட்டாய் தயாரிப்பதில் ஊழல் செய்திருப்பதாகவும், உலக நீதிமன்றத்தில் அவர் மீதும் சோனியா மீதும் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
சுப்பிரமணியசாமி இப்போது புதியதாக ஒரு சீட்டு கேட்டிருப்பதால் அறிவாலய வட்டாரம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனுக்கு பல ஆண்டுகளாக இதயத்தில் மட்டுமே சீட்டு கொடுத்து அல்வா கொடுத்துக் கொண்டிருப்பதால் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் அதிமுகவுக்கு தூது விட்டு வருவதாக வரும் செய்திகளால் கருணாநிதி கலங்கிப் போயிருக்கிறார்.
No comments:
Post a Comment